ஷாருக்கானை சந்தித்த \'ஐபேக்\' பிரசாந்த் கிஷோர்... பின்னணி என்ன?!பிரபல தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் நேற்று இரண்டு முக்கிய சந்திப்புகளை நடத்தி இருக்கிறார். இந்த விவகாரம் அரசியலை தாண்டி சினிமா வட்டாரத்திலும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அது தொடர்பாக விரிவாக பார்ப்போம்!இந்தியாவில் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதற்கென்று சில கார்பரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் ஓ.எம்.ஜி, ஐபேக் போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் நம்பர் ஒன்னாக இருப்பது \'ஐபேக்\' அதாவது \"இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி\". இந்நிறுவனத்தை இயக்குபவர் பிரசாந்த் கிஷோர். இவர் வகுத்துக் கொடுக்கும் வியூகத்தின் அடிப்படையில் தான் மோடி முதல் நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை தேர்தலை சந்தித்துள்ளார்கள்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் ஒரு பொது சுகாதார ஆய்வாளர். ஐக்கியநாடுகள் சபையில் எட்டு வருடங்கள் பணியாற்றிவிட்டுத் திரும்பிய இவர் தற்போது அரசியல் வியூக நிபுணராக அறியப்படுகிறார். 2012\'ல் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலின்போது ஊடகங்களில் அதிகம் அடிபட்டது இவரது பெயர். 2012 - மோடிக்கு எதிராக வீசிய அலையை வெற்றியின் திசையில் மடைமாற்றியது இந்த பிரசாந்த் கிஷோர் தான். 

 

குஜராத்தில் மோடி மூன்றாவது முறையாக முதல்வர் ஆக பிரசாந்த் கொடுத்த ஆலோசனைதான் காரணம். அதன் பிறகு 2014\'ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க அதிக பெரும்பான்மையுடன் வென்றது. இதற்கு பின் நின்றது பிரசாந்த்தின் ஐபேக். இப்படி இவரது ஐபேக் நிறுவனம், காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளுடனும் பணியாற்றியுள்ளது. அதேபோல், பீகாரில் நிதிஷ் குமாருக்கு மெகா கூட்டணி அமைக்க திட்டம் வகுத்தது. ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. 

 

கடைசியாக, தமிழகம், மேற்குவங்கம் தேர்தலுக்காக மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலின் உடன் பணியாற்றிய, பிரசாந்த் தற்போது தேர்தல் வியூக பணியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இந்தநிலையில் தான் நேற்று ஒரு முக்கிய சந்திப்பை மேற்கொண்டார். அது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடன் நடந்த சந்திப்பு தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவை எதிர்க்க மூன்றாவது அணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஐபேக் வேலை செய்வது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்ததை 2 மணிக்கு தான் முடிந்துள்ளது.இந்த சந்திப்புக்கு பிறகு மற்றொரு சந்திப்பையும் பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டார் என ஏபிபி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தமுறை அவர் சந்தித்தது அரசியல்வாதி அல்ல. பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை தான் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

ஷாருக்கானின் எஸ்.ஆர்.கே.வின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையைப் பற்றி ஒரு வெப் சீரிஸாக எடுக்க விருப்பப்படுவதாகவும், அந்த திட்டத்தை முன்னெடுக்கவே, இருவரும் சந்தித்து ஆலோசித்தனர். இருப்பினும், பிரசாந்த் கிஷோர் இந்த திட்டத்திற்கு இன்னும் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் அந்த வெப் சீரிஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post