60 வயது நபரின் மூளையிலிருந்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை அகற்றம்!

 


நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் நீடித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரண்டாம் அலை கொரோனா பரவல் கொடூரமாக பரவி பாதிப்பையும், உயிரிழப்பையும் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. இது ஒரு புறம் என்றால் கொரோனா பாதித்தவர்களிடையே கண்டறியப்பட்ட mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் நாட்டின் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் புதிய சவாலை ஏற்படுத்தியது.இதன் பிறகு வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என அடுத்தடுத்து புதிய நோய்கள் கண்டறியப்பட்ட போதிலும் கருப்பு பூஞ்சை மிகவும் ஆபத்தான ஒன்றாகவே மாறியிருக்கிறது.இதுவரையில் நாடு முழுவதும் 31,216 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 2109 பேர் உயிரிழந்திருப்பது இந்நோய் மீதான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த 60 வயது ஆன நபர் ஒருவரின் மூளையில் இருந்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை அகற்றப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.பீகார் தலைநகரம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (IGIMS) மருத்துவமனையில் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.ஜமூய் பகுதியைச் சேர்ந்த அனில் குமார் (வயது 60) என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில நாட்களாகவே அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக அவர் IGIMS மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு மூளையில் இருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து மருத்துவர் மனிஷ் மண்டல் என்பவர் அனில் குமாருக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சையை அகற்றியுள்ளார். இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் மனிஷ் கூறுகையில், அனில் குமாருக்கு மூக்கின் வழியாக கருப்பு பூஞ்சை மூளைக்கு சென்றிருக்கிறது. நல்ல வேளையாக அவரின் கண்களுக்கு அது பரவவில்லை. இது போல பாதிக்கப்பட்ட பலருக்கும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் கண்கள் நீக்கப்பட்டது என கூறினார்.கருப்பு பூஞ்சை நோயானது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களிடையே கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.-

Post a Comment

Previous Post Next Post