தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..! எவற்றிற்கெல்லாம் கட்டுப்பாடுகள்?

 தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஏப்ரல் 10 ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா பரவலைத் தடுக்க மறு உத்தரவு வரும் வரை பல்வேறு செயல்பாடுகளுக்குத் தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

 

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட தடங்களைத் தவிரப் பன்னாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும். நோய்ப் பரவலைக் கருத்திற்கொண்டு திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10 முதல் தடை விதிக்கப்படுகிறது. 

 

கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. மாவட்டங்களிலும் சில்லறை விற்பனைக் கடைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. 

 

தொழிற்சாலை, வணிக வளாகம், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவு விடுதிகளில் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்து, கிருமிநாசினி, முகக்கவசம் பயன்படுத்துவதை உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் இல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. 

 

மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை. 

 

உணவகங்கள், தேநீர்க் கடைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும். 

 

உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும்.திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். 

 

உள் அரங்கங்களில் அதிகப்பட்சம் 200 பேர் மட்டும் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் விழாக்கள் அனுமதிக்கப்படும். திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். 

 

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபடுவதற்கு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. 

 

வாடகை மற்றும் டேக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கும் கட்டுப்பாடு கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். 

 

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும். வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோரைத் தொடர்ந்து கண்காணிக்க \"இ\" பதிவு முறை செயல்படுத்தப்படும். 

 

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் கள அளவிலான குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியில் வராத வகையில் காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை ஊழியர்களைக் கொண்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். 

 

பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி சோப்பைப் பயன்படுத்திக் கைகழுவவும், சமூக இடைவெளியியைப் பின்பற்றவும் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்தும் ஒத்துழைப்பு நல்கினால்தான் நோய்ப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

 

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post