10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ்

 


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றால் அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாஸ்

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தேசிய அளவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1.26 லட்சத்தை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்து விட்டது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் கண்டிப்பாக மாணவர்களுக்கு கொரோனா தொற்றும். இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தேர்வுகள் எனப்படுபவை மாணவர்களின் மனநிலையுடன் சம்பந்தப்பட்டவை. எந்த நிமிடம் கொரோனா தொற்றுமோ? என்ற அச்சத்துடன் மாணவர்களால் தேர்வு எழுத முடியாது. அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த விடைகளைக் கூட எழுத முடியாத நிலை உருவாகும். பொதுத்தேர்வுகளை எழுதி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றால் அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும்.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை பின்பற்றும் கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதே போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

எனவே தமிழ்நாடு பாடத்திட்டத்தின் படியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து விட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறி விக்க வேண்டும். ஒருவேளை பொதுத்தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் ஆன்லைன் முறையில் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post