மார்ச் 31 கடைசி: பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லையெனில் அபராதம் விதிக்கப்படுமா ?


 கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக சொல்லப்பட்டிருந்தது. இதற்குமுன்னர் 2020 மார்ச் 31-ம் தேதி வரையிலும், பின்னர் ஜூன் 30-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதார் கார்டு

தற்போதைய நிலையில் இந்தியாவில் 51 கோடி மக்களிடம் பான் கார்டு இருப்பதாகவும், அதில் 32 கோடி பேர் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதாகவும் புள்ளி விவரம் சொல்கிறது. மீதி இருக்கும் 19 கோடி பேர் மத்திய அரசின் உத்தரவின்படி, வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் செய்துவிடுவது நல்லது. அப்படி இணைக்காமல் விட்டுவிட்டால், அவரின் பான் எண்ணை வருமான வரித்துறை செயலிழக்கச் செய்துவிட (Deactivate) வாய்ப்பு உண்டு. அதன்பிறகு எப்போது அவர் எப்போது பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கிறாரோ, அப்போதுதான் அவரின் பான் எண் செயல்படத் தொடங்கும். (Activate). இதற்கான வழிமுறைகள் வருமான வரிச் சட்டத்தில் விதி எண் 113AAA-ல் உள்ளன.

மேலும், வருமான வரிச் சட்டப்படி, பான் கார்டு இல்லாமல் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளையும், பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. அதாவது, மோட்டார் வாகனம் வாங்க/விற்க, வங்கியில் புதிய கணக்கு தொடங்க, கிரெடிட் கார்டு வாங்க, டீமேட் கணக்கு தொடங்க, ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் பில் தொகை ரூ.50,000-க்கு மேல் பணமாகச் (Cash Payment) செலுத்த, வங்கியில் ரூ.50,000-க்கு மேல் பணம் டெபாசிட் செய்ய மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.50,000-க்குமேல் முதலீடு செய்ய மற்றும் வருமான வரி தாக்கல் என பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் செய்ய முடியாது.


அதுமட்டுமில்லாமல், இந்த இணைப்புக்கு ஏற்கெனவே இரண்டு முறை கால அவகாச நீட்டிப்பு கொடுக்கப்பட்டு இருப்பதால், இனியும் கால அவகாசம் தரப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதிக்குப்பிறகு, செல்லாத பான் கார்டை வைத்திருப்பவர்கள், வருமான வரித் துறையினரின் நடவடிக்கைக்கு உள்ளாக வாய்ப்புண்டு. அதே போல, ஏப்ரல் 1-ம் தேதிக்குப்பிறகு, செல்லாத பான் கார்டு விவரங்களைப் பயன்படுத்தினால் வருமான வரிச் சட்டம் ‘272 பி’ பிரிவின் கீழ் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

எப்படி இணைப்பது?

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் ‘Link Aadhaar’ பிரிவில் ஆதார் எண், பான் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி எளிதாக இணைக்கலாம். உங்கள் ஆதாருடன் உங்கள் பான் கார்டு ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ‘Aadhaar Status’ பிரிவில் தெரிந்துகொள்ளலாம்.


எஸ்.எம்.எஸ் மூலமாகவும் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN SPACE 12 digit Aadhaar Num SPACE 10 digit PAN Num என்ற முறையில் எஸ்.எம்.எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம். இந்த இணைப்புக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

எளிதில் செய்துமுடிக்கக்கூடிய இந்த விஷயத்தை உரிய கால அவகாசத்தில் செய்து முடித்துவிட்டால் நிம்மதிதானே!

Post a Comment

Previous Post Next Post