போராட்டம் செய்தால் அரசு உத்தியோகம் கிடையாது. - எதிர்கட்சி தலைவர் கண்டனம்

 


பாட்னா: போராட்டம் செய்தால் அரசு உத்தியோகம் கிடையாது என்று பீகார் அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்கட்சி தலைவர் தேஜஷ்வி யாதவ்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பீகார் மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘சமூக ஊடகங்களில் மோசமான, அவதூறு பதிவுகள் இடுவோர் மீது  நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது போக்குவரத்தை தடுக்கும் நோக்கில் சாலை மறியல் செய்வோருக்கு அரசு உத்தியோகம் மற்றும்  அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்காது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போன்றவற்றில்  ஈடுபடுவோர் குறித்து காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டால், அவர்கள் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்படும்.

அத்தகைய நபர்கள் கடுமையான வேலைகளுக்கு தயாராக இருக்க வேண்டும். காரணம் அவர்களுக்கு அரசாங்க உத்தியோகமோ, அரசு  ஒப்பந்தங்களோ கிடைக்காது. போராட்டங்களில் ஈடுபடும் எந்தவொரு நபரும் காவல்துறையினரால் வழங்கப்படும் சரிபார்ப்பு  அறிக்கைக்கு பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் அரசு பிறப்பித்த இந்த உத்தரவால்,  அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தேஜஷ்வி யாதவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து  அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘உலகின் சர்வாதிகாரிகளாக கருதப்படும் முசோலினி, ஹிட்லர் ஆகியோருக்கு சவால் விடும்  வகையில் நிதிஷ் குமார் ஆட்சி உள்ளது. மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையின்படி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்  செய்தால் அவர்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்காது என்று கூறுகின்றனர். அதாவது, அவர்கள் வேலையும் கொடுக்க மாட்டார்கள்.  எதிர்ப்பை வெளிப்படுத்தவும் விடமாட்டார்கள். ெவறும் 40 இடங்களுக்காக (எம்எல்ஏக்கள் ஆதரவு) முதல்வர் நிதிஷ்குமார் ஏன்  இவ்வளவு பயப்படுகிறார்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Post a Comment

Previous Post Next Post