குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எப்பொழுது கிடைக்கும் - புதிய கண்டுபிடிப்பு


 கருப்பையில் இருக்கும்போதே குழந்தைக்கு தாய்மார்களிடமிருந்து கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் கிடைப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தை

கொரோனா பெருந்தொற்றின் கோரத்தாண்டவம், உலக சுகாதார வரலாற்றில் மறக்க முடியாத பேரழிவாக பதிவாகி உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உருமாற்றம் அடைந்து மக்களை அச்சுறுத்தி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பூசி மருந்துகள் பரவலாக பயன்பாட்டிற்கு வந்திருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 
எனினும், பிறந்த குழந்தை மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக அவ்வப்போது வெளிவரும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மருத்துவத்துறை உரிய வழிமுறைகளை வழங்குகிறது. 
அவ்வகையில், அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின், மருத்துவ வல்லுநர் டாக்டர் டஸ்டின் பிளானரி மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில், புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது, கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்கும் ஆன்டிபாடிகள் பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு கிடைப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து, அமெரிக்க மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் விரிவாக எழுதி உள்ளனர்.
மொத்தம் 1400 தாய்மார்கள் மற்றும் அவர்களின் பச்சிளம் குழந்தைகள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் புதிய health tips அறிய இங்கே கிளிக் செய்யவும்இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அல்லது முன்னர் பாதிக்கப்பட்ட 83 கர்ப்பிணிப் பெண்களில் 72 பேரில், கொரோனாவை எதிர்க்கும் ஐ.ஜி.ஜி என்ற ஆன்டிபாடிகள், நஞ்சுக்கொடி முழுவதும் பரவியிருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த கண்டுபிடிப்பானது, தாய்க்கு பாதிப்பு இருந்தாலும், அவரது குழந்தைக்கு குறைந்தபட்சம் சில பாதுகாப்பை வழங்கும் என்பதை தெரிவிக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது அவர்களின் பிறக்காத குழந்தைகளையும் பாதுகாக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கர்ப்பிணிப் பெண்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க காய்ச்சல் தொடர்பான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்க, தாய்வழி பெறப்பட்ட குறிப்பிட்ட ஆன்டிபாடிகளின் திறனை தங்கள் கண்டுபிடிப்புகள் நிரூபித்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளில் எந்த குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. கொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருந்த பெண்களில் 60% பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும் கூட, ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகளை செலுத்தும்படி அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post