கனவை நிறைவேற்றிய மகனின் கதை

 

சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். இன்றைக்கு பல்வேறு போட்டிகளில் சதீஷ்குமார் பதக்கங்களை குவிக்கிறார் என்றால் அதற்கு முதல் காரணம் அவரது அப்பா சிவலிங்கம்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிவலிங்கம், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி வரை முன்னேறினார். ஆனால் அடுத்த கட்டத்துக்கு அவரால் முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் சிறுவயதில் பள்ளியில் நடந்த பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க விரும்புவதாக சிவலிங்கத்திடம், அவரது மகன் சதீஷ்குமார் கூறியதும் மகிழ்ச்சி அடைந்தார். ஒரு வாரம் பயிற்சி அளித்தார். அந்த ஒரு வார பயிற்சியிலேயே தன் முதல் போட்டியில் 40 கிலோ எடையைத் தூக்கி அசத்தியுள்ளார் சதீஷ்குமார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவலிங்கம், சதீஷ்குமாரை அருகில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தார். அத்துடன் தானும் பயிற்சி கொடுத்துள்ளார்.

படிப்படியாக வளர்ந்து தேசிய அளவில் பதக்கங்களை வென்ற சதீஷ்குமாருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்ததுடன் பாட்டியாலாவில் தங்கி பயிற்சி பெற வாய்ப்பும் கிடைத்தது. பொதுவாக பலரும் விளையாட்டு கோட்டாவில் வேலை கிடைத்ததுடன் விளையாட்டை விட்டுவிடுவார்கள். ஆனால் சதீஷ்குமார் அப்படிச் செய்யவில்லை. தன் குடும்பத்தைக்கூட மறந்து பயிற்சி மையமே கதியென்று கிடந்தார். இப்படி குடும்பத்தையும் மறந்து கடுமையாக பயிற்சி பெற்றதன் பலன்தான், காமன்வெல்த் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களாக வாங்கிக் குவிக்கிறார் சதீஷ்குமார். அத்துடன் தன் தந்தையின் கனவையும் நிறைவேற்றி வருகிறார்.


மேலும் புதிய செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

Previous Post Next Post