தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு


 தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.13) பலத்த மழையும், 2 மாவட்டங்களில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது: குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ராமநாதபுரம், கடலூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.13) இடியுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகா், தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.14: புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜன.15, 16: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜனவரி 15,16 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்…: சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 180 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணியில் 150 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தலா 140 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் 120 மி.மீ., திருவாரூா் மாவட்டம் குடவாசல், முத்துப்பேட்டையில் தலா 110 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 100 மி.மீ., மதுக்கூா், திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, திருவாரூரில் தலா 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post