3 வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை : உச்சநீதிமன்றம்

 

இடைக்கால தடை 

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பினரின் வாதங்களை கேட்ட பின்னர், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிரச்சனையை தீர்ப்பதற்கு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை தடை செய்வதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குழு அமைப்பதில் இருந்து பூமியில் எந்த சக்தியாலும் தங்களை தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். குழு அமைக்கும் முடிவுக்கு திங்கட்கிழமை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை களநிலவரம் என்ன என்பதை அறிந்து பிரச்சனையை தீர்க்கவே முயற்சிப்பதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி பாப்தே, இந்த முடிவுக்கு விவசாயிகள் சங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அரசியல் மற்றும் நீதித்துறை இடையே வேறுபாடு உள்ளது என்றும், இது அரசியல் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரச்சனையை உண்மையிலேயே தீர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குழுவிடம் செல்லலாம் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். 

பாரதிய கிசான் யூனியன் தலைவர் ஜிதேந்தர் சிங் மான், வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி உள்ளிட்ட 4 பேர் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த தடை விதிக்க கோரி டெல்லி போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விவசாயிகள் சங்கங்கள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

வேளாண் சட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு, 10 நாட்களுக்குள் முதல் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், முதல் கூட்டம் நடைபெற்ற தேதியில் இருந்து 2 மாதங்களுங்களுக்குள் பரிந்துரைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பு இருந்த குறைந்தபட்ச ஆதார விலை முறை, அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Join telegram : CLICK HERE

Post a Comment

Previous Post Next Post